Tuesday, December 26, 2006

பதிவர் நிலாவுக்கு நன்றி!

நண்பர்களே கடந்த பதிவில் ஏழைப்பெண் மகாலெட்சுமியின் மேற்படிப்புக்கு உதவி கேட்டு பதிவு போட்டிருந்தேன். பதிவர் நிலா சில கேள்விகளை முன்வைத்து தனிப் பதிவு போட்டிருந்தார். உண்மையை சொல்ல வேண்டுமானால் என் நண்பர் ஒருவர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில், அய்யா ஞான வெட்டியான் அவர்களை விசாரிக்கச்சொல்லி அந்த பதிவை அவசரமாக வலையேற்றினேன்.

நிலா மற்றும் பத்மா அவர்களின் நியாயமான கேள்விகள் என்னை துளைத்து எடுக்க, நான் நேரடியாக மகாலெட்சுமி குறித்து விசாரித்தேன். அதன் படி பெறப்பட்ட தகவலை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

* தற்போது மகாலெட்சுமியின் குடும்பம் சீலப்பாடியில் இல்லை. அவர்கள் திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியில் வசித்து வருகிறார்கள்.

* எம்.எஸ்.சி வரை அவர் படித்து வந்ததே கருணை உள்ளம் கொண்ட பலரின் உதவியால் தான். அவரின் ஆசிரியரின் வழிகாட்டுதலால் தான் அவர் பி.எட் சேர்ந்துள்ளார். அதற்காக தங்கள் சொந்த வீட்டை விற்று பணம் கட்டி இருக்கிறார்கள். அதனால் குடும்பம் திண்டுக்கல்லுக்கு இடம் மாறி இருக்கிறது.

* வறுமையிலும் நேர்மை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். மகாலெட்சுமியின் தந்தையிடம் பேசிய போது, "என் மகளைப் படிக்கவைக்க கிடைக்கப் போகும் பணம் இனாமாக வேண்டாம் சார். கடனாக கிடைத்தால் போதும். இயன்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னார். வறுமையிலும் தன்மானத்தோடு வாழ நினைக்கும் அந்த தமிழனைப் பற்றி பெருமைபட்டுக்கொண்டேன்.

ஆகவே, வலைப்பதியும் நண்பர்களே! கிடைத்த பணத்தை அவருக்கு வட்டி இல்லா கடனாக வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். அவர் சிறுகச்சிறுக திரும்பக்கொடுத்த பின், உண்மையில் அவதிப்படும் வேறு யாருக்கேனும் அந்தே பணம் மீண்டும் உதவ பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன்.

தங்களின் மேலான கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். தன்மானம் இன்னும் மரித்துப் போய் விடவில்லை என்பதை அந்த ஏழைத்தமிழன் மூலம் அறிந்துகொள்ள உதவிய நிலாவுக்கும், பத்மாவுக்கும் ஏனைய பதிவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Friday, December 22, 2006

விடுமுறை - உடலுக்கு மட்டும்

ஒரு ஆண்டுக்கு பிறகு எடுக்கும் ஒரு வார விடுமுறை...ஆறு மாதங்களுக்கு முன்பே அப்ளை செய்தது...கடுமையான அலுவலக பணிகளை தேவையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விரைவில் வர இருக்கும் சகோதரர் திருமண விழாவிற்க்காக கிராமத்தில் இருக்கும் வீட்டை பெயிண்டிங் செய்வது நீண்ட கால திட்டம்...

மகாலட்சுமிக்கு உதவி வேண்டி வலைப்பதிவர்களின் ஆதரவு கேட்டு இன்றோடு இரண்டாவது நாள்...இத்தனை ஈர இதயங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது என்ன கவலை என்று ஒருபுறம் அகம் மகிழ்ந்தாலும் இந்த பெரும் பணியை முன்னெடுத்து செல்ல யார் உதவியையாவது பெறவேண்டுமே ?

ஜனவரி முதல் வாரத்தில் ஞானவெட்டியான் ஐயா கல்லூரி கட்டணத்தை செலுத்தும் நாள்தான் அந்த ஏழைப்பெண் நிம்மதி பெருமூச்சு விடும் நாள் என்றாலும், பதிவர்கள் கருணை உள்ளத்தோடு கொடுக்கும் நிதியை சரியான நேரத்தில் ஐயாவின் வங்கி கணக்கில் செலுத்தும் பணியை மட்டும் இப்போதைக்கு ஏற்க்கிறேன்...

யார் யார் உதவி செய்துள்ளார்கள், இன்னும் உதவி செய்யப்போகின்றவர்களின் விவரங்கள், அனைத்தும் பதிவர் பொன்ஸ் அவர்கள் சேமித்து வைத்துள்ளார், சேமித்துக்கொண்டிருக்கிறார்...

மேற்க்கொண்டு ஆதரவுக்கரம் நீட்டும் அனைவரும் என்னுடைய மடலுக்கும் (zyravi@yahoo.com) , ஐயா ஞானவெட்டியான் மடலுக்கும் (njaanam@gmail.com)தெரிவிப்பதோடல்லாமல் பொன்ஸ் அவர்களின் மின்னஞ்சலுக்கும் தெரிவித்தால் மிக உதவியாக இருக்கும்...பொன்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரி poorna.rajaraman@gmail.com இதுதான்..

பொன்ஸ் அவர்கள் இதுவரை சேமித்த தகவல்கள், சேகரித்த நிதியம் போன்றவை குறித்தான பதிவொன்றை இடுவார்...காத்திருக்கிறேன்...

இந்த செய்தியை வலையில் மற்ற நன்பர்களுக்கு தெரிவித்தும், தார்மீக ஆதரவு கொடுத்தும், பதிவிட்டும், நிதியளித்தும் உள்ள அத்துனை வலைப்பதிவாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் அதே நேரம் பற்றாக்குறையை நீக்க மேற்க்கொண்டு நிதி அளிப்பதாக உறுதியளித்திருக்கும் / அளிக்கப்போகும் அத்துனைவருக்கும் முன்பே என்னுடைய நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்....

இறுதியாக இந்த வரிகளுடன் இப்போது விடைபெற்றுக்கொண்டு

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல்,
ஆலயம் பதினாயிரம் செய்தல்,அன்ன யாவிலும் புண்ணியம் மிக்கது
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் !!!!

நல்ல செய்தியோடு திரும்பி வருகிறேன்...

என்னை தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண் 98805 97061. நான் தமிழகத்தில் ரோமிங்கில் இருப்பதால் 9443405765 என்ற எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம்...லேண்ட் லைன் 04153 225317...

இந்த காரியத்தை நிறைவு செய்யும் வழிபற்றி ஓய்வில்லாம் சிந்தித்திருப்பேன்....!!!!!!!

Monday, December 11, 2006

மூடுவிழா அறிவிப்பு !!!!

தனித்திரு விழித்திரு பசித்திரு வலைப்பூ விரைவில் மூடுவிழா காண இருக்கிறது !!! இன்று மதியம் அறிவிப்பை வெளியிடுகிறேன்...!!! அதனால ஒன்னும் பெரிசா பாதகமில்லை என்றுதான் நினைக்கிறேன்.. !!!

அன்புடன்,
செந்தழல் ரவி

Friday, December 08, 2006

இதோ வெற்றியாளர்கள் !!!!!!!!!

பின்னி பெடலெடுத்திட்டீங்க மக்களே !!!! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது மக்களே !!! பரிசுக்குரியவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீநாத், பாலு, வனிதா, ராஜீவ் , தீனா ஆகியவர்களுக்கு நன்றி...முக்கியமாக பாலு, அனைத்து பின்னூட்டங்களையும் தனியாக வேர்ட் டாக்குமெண்டில் வைத்து, பெயர்களுக்கு பதில் நெம்பர் கொடுத்து நடுவர்களுக்கு அனுப்பியது மிகவும் சிறப்பான பணி !!!! ஆனால் தான் நடுவராக அமர்த்தப்படாதது குறித்து கோபித்தான்..

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் எண் இடப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டன...ஒவ்வொரு நடுவருக்கும் அதிகபட்ச மதிப்பெண் கொடுக்கப்பட்டது...மதிப்பெண்கள் இடப்பட்டு மீண்டும் பாலு அந்த மதிப்பெண்களின் ஆவரேஜ் எடுத்தார்...டன் டன்டன்ன்னன்...

இதோ வெற்றியாளர்கள்....

முதல் பரிசு...

லக்கிலூக்... ( LG KG300 Mobile - LG Dinamite - Worth RS 10,000.

இரண்டாம் பரிசு

சந்தனமுல்லை / பத்மகிஷோர் (புத்தகங்கள்)

பன்னிரண்டு மணிக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிறகு சில பின்னூட்டங்கள் வந்தன...அவையும் அருமையாக இருந்தன...இருந்தாலும் அவைகளை ஆட்டத்தில் சேர்க்க முடியவில்லை...அவைகளை எழுதியவர்கள் இரா.அரங்கன், வேலவன், மற்றும் மதுமிதா...இரா அரங்கன் சூப்ப்ராக எழுதி இருந்தார்...

நடுவர்குழுவிடம் இருந்து வந்த ரிசல்ட் ஓக்கே...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் வெற்றி பெறுவார்கள் என்று நான் எதிர்பார்த்தது கலக்கலாக இருந்த தமிழி, சேதுக்கரசி, வானமே எல்லை, ஆதிரை, அருள்பெருங்கோ,சயீத் மற்றும் ஜி.ராகவன் ஆகியோரது பின்னூட்டங்கள்...

முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நடுவர்கள் குழுவில் இருவர் மிகவும் அப்போஸ் செய்தார்கள்...ஜீவன் பின்னூட்டங்கள் அருமையாக இருக்கின்றன என்று...ஆனால் இது மதிப்பெண் அடிப்படையில் அமைந்ததால் லக்கியார் மீண்டும் வெற்றிக்கனியை தட்டிப்பறிக்கிறார்...

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, வெற்றி பெற்றவங்களுக்கு பரிசை அனுப்பும் வேலையை ஆரம்பிக்கிறேன்...!!!!! முயற்ச்சி செய்தவர்களுக்கும் மிகவும் நன்றி.....என்னோட நட்பை அவங்களுக்கு பரிசாக தருகிறேன்...!!!

ஸ்ரீரங்கத்தில் பெரியார் : தேவையா ?



இன்றைய தினத்தந்தியில் பார்த்தவிஷயம், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு, அதற்க்கு கலைஞர் கண்டனம்....ஸ்ரீரங்கப்பெரியார் சிலை புகைப்படம் ( முக்காடிட்டது)..அதன் பின்னனியில் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் கோபுரமும்... சரியான படம் கிடைக்கவில்லை....அதனால் நெட்டில் சுட்ட ஒரு படத்தை வெளியிட்டுள்ளேன்...

கடவுள் இல்லை என்று சொன்ன அந்த ஈரோட்டுக்கிழவனுக்கு எதுக்குப்பா சிலை....அவர் இருந்திருந்தா தனக்கு சிலை வைக்க ஒத்துக்கிட்டிருப்பாரா ? இல்லை பெரும்பாலனவர்களின் நம்பிக்கையான கோவிலின் முகப்பில் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவரின் அடையாளத்தை "வைக்க"த்தான் ஏற்றுக்கொண்டிருப்பாரா ?

மற்றவர்கள் மனம் புன்படும் என்றால் அந்த புண்ணை குத்திக்கிளர ஒத்துக்கொண்டிருப்பாரா ? அப்படி என்ன பெரிதாக கண்டறிந்துவிட்டார் அந்த ஈரோட்டுக்கிழவர் ? வெளிவேடம் போடாதீங்கடா, நீங்கள் நீங்களாக இருங்கள் என்று மியூனிச்சில் உடையில்லாமல் நின்றது எவ்வளவு கேவலம் ? ஆண்ரமீடா கிரகத்தையும், செவ்வாயில் தண்ணீர் ஓடியதையும் காணும் இந்த நாளில் செவ்வாய் தோஷம், பரிகாரம் செய்யனும் என்று ஊரை ஏமாற்றும் ஜோசியத்தை நம்பாதீங்கடா, ஜாதகத்துல போட்டிருக்குன்னு கட்டின பொண்டாட்டியை விலக்கிவைக்கும் அபத்தத்தை செய்யாதீங்கடா, கடவுள் என்பது உங்களை ஏமாற்றி ஆட்டு மந்தைக்கூட்டமாக நடத்தப்பட்ட சதியடா என்று ஏதாவது புலம்பி இருப்பார்...

நமக்குதான் தெரியுமே...பிரம்மா,சிவன்,விஷ்னு, இவங்கதானே உலகத்தை படைச்சது...இதைத்தான் கிறிஸ்தவர்கள் காப்பியடிச்சு பிதா,சுதன்,பரிசுத்த ஆவின்னு வெச்சுக்கிட்டாங்க...பக்தியுடன் எழுதும் பதிவர்கள் அதைத்தானே நம்புறாங்க...அவங்களுக்கு பிங் பாங் தியரியை நம்பும் அளவுக்கு அறிவு இருக்கு...டார்வின் பரினாம வளர்ச்சி தியரியை பற்றி தெரிஞ்சு வெச்சிருப்பாங்க...டையனோசர் FASIL பற்றி படிச்சிருப்பாங்க...ஆனால் காலங்காலமா இருக்க ஆட்டு மந்தையிலிருந்து வெளியே வர ஏதோ ஒன்னு தடுக்கும்....

உன் புருஷன் உனக்கு துரோகம் செய்தால் அவனுக்கு துரோகம் செய்து செருப்படி கொடு என்று பெண்களுக்கு ஏதாவது வேண்டாத அறிவுரை சொல்லியிருப்பார்...தேவையா நமக்கு அது...நம் கலாச்சாரமா அது...கட்டின புருஷனை விபச்சாரி வீட்டுக்கு தூக்கிச்சென்ற பண்பாடு நமது...கல்லானாலும் புருஷன், FULL ஆனாலும் புருஷன் குவாட்டர் அடித்தாலும் புருஷன் என்று கூறிய வீரம் செறிந்த பரம்பரையாச்சே நமது தமிழ் பரம்பரை.....

மர்பிஸ் லா (Murphy's Law) அப்படீன்னு ஒன்னு இருக்கு...எது பெயிலாகுமோ அது பெயிலா பூடும்...உருப்புடாமே போறது உருப்புடாது...இதுக்கு மேல எளிமையா சொல்லத்தெரியல...அதனால எங்கே பிரச்சினை வர வாய்ப்பு இருக்கோ, அங்கே பிரச்சினை கண்டிப்பா வரும்...இருந்தும், தெரிந்தும், அங்கே எதற்க்காக அந்த சிலையை கொண்டுபோய் வைக்கவேண்டும்...திராவிட கட்சி ஆட்சியில இருக்கு...அதனால நாம இப்போ வைக்குறது தான் சட்டம்...அதனால கொண்டுபோய் வைப்போம்...அவன் என்ன செய்யறான்னு பார்க்கலாம் ? ஏன் இந்த திமிர் ?

அட அதெல்லாம் விடுங்க...சமீபகாலமா பெரியார் வெங்காயத்தை எப்படி உரித்தார் என்பதை வலைப்பதிவர்கள் கிழிச்சு காயப்போடுறாங்க...அவர் கன்னட வெறியர்...சாவப்போற காலத்துல கல்யாணம் செய்துக்கிட்டவர்...அப்படி எல்லாம்...ஏன் அந்த காழ்ப்புணர்ச்சி வருதுன்னு தெரியல...ஒருவேளை தூங்கிக்கிட்டு இருந்தவங்களை எழுப்பிவிட்டுட்டாரே இந்த ஈரோட்டுக்கிழவன் என்ற எரிச்சலா ? இன்னும் கொஞ்ச காலம் அடக்கி வெச்சிருந்திருக்கலாமே இவனுங்களை...ரொம்பத்தான் துள்ளுறானுங்க என்று நொந்ததால் வந்த வினை ?

இன்னும் ஓராயிரம் பெரியார் வரவேண்டும்...காலங்காலமாக கட்டிவைத்திருந்த தளைகளை அவர் நீக்கிச்சென்றார்...ஆனால் இன்னும் இந்த மக்களை பீடித்தாட்டும் மூட நம்பிக்கைகளையும், பழமை பழக்கங்களையும், தூக்கி எறிய, வாழ்ந்து காட்ட...சிலை வேண்டாம் அவருக்கு...

வா நீ...எழுந்து வா....உயிர்த்தெழ முடியும் என்று ஊரை ஏமாற்றும் கூட்டம் ஒன்று உண்டு...நானும் ஏமாந்தவன் தான் பலகாலம்..அது உண்மை என்றால் முதலில் இவனை உயிர்த்தெழ வையுங்க !!!

உண்மையான புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்...

Thursday, December 07, 2006

பரிசுப்போட்டி : அபத்தக்களஞ்சியம் தமிழ்சினிமா

பரிசுப்போட்டி பரிசுப்போட்டி பரிசுப்போட்டி...

சரி விஷயத்துக்கு வந்திடுறேன்...நீங்க பல தமிழ் சினிமா பார்த்திருப்பீங்க...நம் தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் இருக்கோ இல்லையோ அபத்தத்துக்கு பஞ்சமே இருக்காது...இங்கே விஷயம் என்னான்னா, உங்களுக்கு தெரிஞ்ச அபத்தத்தை நீங்க சொல்றீங்க...சிறந்த அபத்தமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அபத்தத்துக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு...சரி அபத்தம் எப்படி இருக்கும் நான் ரெண்டு சாம்பிள் சொல்லட்டா....

1. எந்த இடத்தில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் சரி...அதை அப்பல்லோ டாக்ரரே போட்டாலும் சரி...வெள்ளை கட்டு துணிக்கு மேலே ஒரு சொட்டு அல்லது வட்டமா ரத்தம் இருக்கிறதை பார்க்கலாம்...( அவருக்கு அடி பட்டிருக்காம் டோய்..)

2. ஹீரோவுக்கு பேரு வெக்க நம்ம தமிழ்சினிமா இயக்குனருக்கு ஒரு கஷடமும் இருக்காது...அதான் இருக்கே ஒரு பேரு...ராஜா..

3. ஆப்பரேஷன் செய்யுற எல்லா டாக்டரும் கண்ணாடி போட்டிருக்கறதும், ஆப்பரேஷன் செய்யப்போற / பெயிலியராகிப்போன / சக்ஸஸஸா ஆகிப்போன விஷயத்தை கண்ணாடியக்கழட்டிக்கிட்டே காட் இஸ் க்ரேட்...எல்லாம் அவன் கைல...என்று மொக்கையான மூஞ்சியை வெச்சுக்கிட்டு சொல்றது...

4. அணுகுண்டே தாக்கினாலும் அடிபட்ட ஹீரோ படுத்துக்கிட்டு ரெண்டு பக்க டயலாக் பேசுறது அபத்தத்திலும் அபத்தம்...

நான் கொஞ்சம் எடுத்து கொடுத்திட்டேன்...இனிமே நீங்க பூந்து விளையாடுங்க மக்களா...சாதாரணமாவே தமிழ்மணம் படிக்கறவங்களோட க்ரியேட்டிவிட்டி என்னை ஆச்சர்யப்பட வெச்சிருக்கு...கலக்குவீங்கன்னு தெரியும்...இருந்தாலும் நியாபகம் வெச்சுக்கோங்க...சர்ப்ரைஸ் கிப்ட்.....

Wednesday, December 06, 2006

நன்பனைத்தேடி ஒரு நெடும்பயணம்

எல்லாருக்கும் ஒரு ப்ரண்டு இருந்திருப்பாங்க...பள்ளி காலத்தில...கல்லூரி காலத்தில...காதலி இல்லாதவங்களை பார்க்கலாம்...சைக்கிள் டூ வீலர் இல்லாதவங்களை பார்க்கலாம்...படிப்பில் நாட்டம் இல்லாதவங்களை பார்க்கலாம்...ஆனால் ஒரு நன்பன் இல்லாதவங்களை பார்க்க முடியுமா ? அட சொல்லுங்க...முடியாதில்லையா....

அதுமாதிரி எனக்கும் ஒரு நன்பன் பள்ளிப்பருவத்தில....இப்போது கணக்கில்லாம நன்பர்கள்...அது வேற விஷயம்...ஆனால் பள்ளிக்காலத்தில நன்பர்கள் தோழனோ - தோழியோ எல்லோருக்கும் குறைவாத்தான் இருந்திருப்பாங்க...நானும் சராசரிதானே...அதனால ஒரே ஒரு ப்ரண்டு...

நான் நெய்வேலியில் படித்தபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தால்
கண்டிப்பாக இவன் இல்லாமல் சொல்லமுடியாது...

வருடம் 1987 ல் இருந்து ஒரே ஆண்டு தான் இவனுடன் படிச்சது...பெயர் எழிலரசன்...நெய்வேலி ப்ளாக் ப்ளாக்கா பிரிக்கப்பட்டிருக்கும்...இப்போ நோய்டா இருக்கமாதிரி...நான் இருந்தது இரண்டாம் ப்ளாக்...என்னோட அப்பா காவல் உதவி ஆய்வாளரா இருந்தது நெய்வேலியில் இருந்த ஒரே போலீஸ் ஸ்டேஷனில்...

எழிலரசனோட வீடு இருந்தது ஒன்பதாம் ப்ளாக்...இரண்டாம் ப்ளாக்குக்கும் ஒன்பதாம் ப்ளாக்குக்கும் இடையே இடைவெளி அதிகமில்லைங்க...ஒரே ஒரு தெரு தான்...நான் இருந்தது ஒட்டக்கூத்தர் சாலை...அவன் வீடு எங்க தெருவில் இருந்து வெளிவந்து குட்டியா ஒரு பாலம் கடந்து, வளைவு திரும்பினா சிதம்பரம் சாலை...அதில் இரண்டாவது வீடு...



இந்த படத்தில் ஆறு 'பி' பிரிவின் பதாகையை தாங்கி அமர்ந்திருப்பதுதான் எழில்...எங்கெ மேரி டீச்சர் பக்கத்தில்...மேரி டீச்சர்...மேரி டீச்சருக்கு அந்த பக்கம் உட்கார்ந்து இருப்பது பர்ஸ்ட் ரேங்கை தவிர வேற எந்த ரேங்கையும் வாங்காத ராகவன்...எழில் எப்போதும் இரண்டாவது ரேங்க்தாரி..இடது பக்கம் கீழே பெஞ்சில் நான் இருக்கேன்...போட்டி எல்லாம் வைக்காமல் நானே சொல்லிடுறேன்...இடப்பக்கம் இருந்து மூன்றாவது...ஒரு விளம்பரதாரி தன்னோட வாட்சை என் மேலே போட்டு படம் காட்டுது பாருங்க...எனக்கு வலப்புறம் வெள்ளை பேண்ட்டில் ஜஹாங்கீர் பாய்(boy)..இன்னும் எல்லார் பெயரையும் சொல்ல ஆரம்பிச்சா மவுஸாலேயே அடிப்பீங்க...

நானும் எழிலும் எப்படி சந்திச்சோம் அப்படின்னுல்லாம் நியாபகம் இல்லை..ஆனால் நாங்க ப்ரண்ட்ஸ்...காரணம் என் வீட்டுக்கு பக்கத்தில் அவனோட வீடு இருந்ததும் என்னோட குட்டி சைக்கிள்ல அவனுக்கு ட்ராப் கொடுத்ததும் கூட இருக்கலாம்...மேலுக்கு சொல்லனும்னா எங்கப்பா போலீஸ் அப்படீன்னு சொல்லி வம்பு செய்யவந்த நாதாரிகளை நான் பயமுறுத்தி அடக்கினதும் ஒரு காரணமா இருக்கலாம்...அதுக்கு ஏத்தமாதிரி அவரும் அப்பப்போ யூனிபார்மோட வந்து ஒரு லுக் விட்டுட்டு போறதாலயும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி அவனுக்கு இருந்திருக்கலாம்...காரணம் எங்க ஸ்கூல்ல தூரத்தில இருந்து வந்து படிக்குற பசங்க - கொஞ்சம் அடாவடியா இருப்பானுங்க...

நாங்க செய்த சின்ன சின்ன குறும்புகள் ஏராளம்..பள்ளியில் குடிநீர் பைப்பருகில் மொத்தமாக வளர்ந்திருக்கும் தொட்டாச்சினுங்கி செடிகள் எல்லாத்தையும் சுருங்க வைக்கனும் என்று விளையாடி மதியம் வகுப்புக்கு போகாம மேரி டீச்சர்கிட்ட அடிவாங்கியது மிகவும் சிம்பிள்..

அப்போ BIG FUN பபிள்கம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான நேரம்...எவனப்பாத்தாலும் பபுள்கம்ல முட்டையை விட்டுக்கிட்டு திரிஞ்சானுங்க...ஒவ்வொரு பபிள்கம்லயும் கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா படம் இருக்கும், அதுக்கேத்தமாதிரி ரன்னும் போட்டு இருப்பாங்க அந்த படத்தில்..கபில்தேவுக்கு சிக்ஸர், அஸாருக்கு நாலு..இதெல்லாம் சேர்த்து வெச்சா கிரிக்கெட் பேட் தர்றதா ஒரே பேச்சு...நானும் என்னால முடிஞ்சவரைக்கும் சேர்த்து பார்த்தேன்...கடைசிவரைக்கும் ஒன்னும் தேறல....எனக்கு தெரிஞ்சு எவனும் பேட்டு இல்லை, ஒரு ஸ்டம்பு கூட வாங்கி சரித்திரம் இல்லைன்னாலும், நானும் ஏதோ சேர்த்துக்கிட்டிருந்தேன்...

இதுல ஒரு மேட்டர்...எங்க கையில காசு இல்லாதப்போ BIG FUN வாங்க என்ன செய்யறது ? இதில்தான் நம்ம எழிலோட குறும்பு..கையில பத்து பைசாவை வெச்சிக்குவோம்...கடையில் ஒரு குறிப்பிட்ட மிட்டாய் டப்பா கடைக்காரர் திரும்பி எடுக்கிறமாதிரி இருக்கும்...BIG FUN டப்பா - இது அதிகமா ஓடுற எப்.எம்.சி.ஜி புராடக்ட் - அப்படீங்கறதால - முன்னாலியே இருக்கும்..கடைக்காரர் திரும்பி பூமரை எடுக்கும் அந்த முக்காலே மூனுவீசம் செக்கண்ட்ல எழில் BIG FUN டப்பாவை திறந்து - கொத்தோட BIG FUN ஐ அள்ளி - பாக்கெட்ல போட்டுக்கிட்டு - திரும்பி டப்பாவை மூடிடுவான்...எழில் வீட்ல அவனோட அப்பா ரொம்ப செல்லம்...தினமும் குறைந்தபட்சம் 50 பைசாவாவது கொடுப்பார்...ஆக பலமுறை நாங்க BIG FUN ஐ மொத்தமா திம்போம்...

உங்களை அதிகம் போரடிக்க விரும்பல...

நான் என்னோட அதிகபட்ச குறும்பு காரணமா - கடலூர் புனித வளனார் பள்ளி - உள்விடுதியில சேர்க்கப்பட்டேன்...அப்பா அடிக்கடி ( தண்ணி இல்லாத காட்டுக்கு) ட்ரான்ஸ்பர் ஆகிறதும் ஒரு காரணம்...அங்கேயே தங்கி படிக்கும்போது வீட்டுக்கு லெட்டர் போடுவேன்...எழில் வீட்டுக்கும் லெட்டர் போடுவேன்...அவனும் எனக்கு நிறைய அட்வைஸ் செய்து லெட்டர் போடுவான்...எனக்கு லீவ் கிடைக்கும்போது எல்லாம் ( வருஷத்துக்கு இரண்டு முறைதான் )அவங்க வீட்டுக்கு பஸ்புடிச்சி போய் பார்ப்பேன்...அவங்க அம்மா சொல்லுவாங்க...எங்க வீட்டுக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் நீதான் என்று..நானும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்..எனக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் உங்க பையந்தான்..என்று...ஒரு முறை அவனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்குன்னு லெட்டர் போட்டான்..நான் கிளம்பி ஒரு பிஸ்கெட் பாக்கெட்டோட அவங்க வீட்டுக்கு போனேன்..( எனக்கு லீவ் ஒரு வருடம் கழித்து தான் கிடைத்தது)...எழில் அம்மா சொன்னாங்க...டேய்...பெரியாளாயிட்டடா நீ...என்று...நான் மையமாக சிரித்து வைத்துவிட்டு, எழில் வீட்டு தோட்டத்தில் நெல்லிக்காய் அடிக்க ஓடினேன்...

அப்படியே ஒரு பத்து வருடத்தை கூட்டிக்கொள்ளுங்க...என்னுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...அவன் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...போனில்லாத அந்த காலத்தில் எப்படியாவது மாதம் ஒரு போஸ்ட் கார்ட் போட்டுவிடுவான்...நான் ப்ள்ஸ் டூ படித்த காலத்தில் எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்க்காக பல லெட்டர் போட்டான்..இன்னும் என் தனிப்பெட்டியில் இருக்கிறது...அவன் சீர்காழியில் டிப்ளமோ சேர்ந்தான்..பிறகு குடும்பத்தில் ஏற்ப்பட்ட ஒரு மாபெரும் பிரச்சினையில் ( அது பற்றி அவன் அனுமதியின்றி எழுதுதல் முறையற்றது) - குடும்பத்தை விட்டு வெளியேற நேர்ந்தது...பிறகு வேலூரிலோ சேலத்திலோ ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் நிறுவனத்தில் இணைந்ததா தகவல் கிடைத்தது...நானும் கல்லூரிப்படிப்புக்கு போயிட்டேன்..

கல்லூரி இறுதி தேர்வுல ஒரு பாடத்துல பெயில்...ஒரு ஆண்டு வீட்ல கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கவேண்டிய கட்டாயம்..அப்படியே ஊர் சுத்திக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருந்தபோது ஒரு நாள் திடீர்னு வீட்டுக்கு வந்தான்...

என்னடா என்று விசாரித்தால், தான் ஓசூரில் பாகாலூர் ரோட்டில் ஒரு ஷேர் புரோக்கரேஜ் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அங்கேயே தங்கியிருப்பதாகவும் சொன்னான்...அடுத்த விஷயம் சொன்னதும் நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்...அங்கேயே வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் வேறு சாதி என்பதால் அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள மறுப்பதாகவும், என்னோட அப்பா போலீஸ் துறையில் இருப்பதால் அவரிடம் சொல்லி தன்னோட கல்யாணத்தை நடத்திவைக்குமாறும் கேட்டான்...

எனக்கு உள்ளூர உதறல்...நாடார் கடையில் தம் அடித்து வைத்த இருவது ரூபாய் கடனை எப்படி அடைப்பது என்று பல திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த ( கடை இருக்கு ஏரியா பக்கம் போறதில்லை) நான் எப்படி இந்த விஷயத்தில் அவனுக்கு உதவமுடியும் என்று தெரியாமல் மண்டை காய்ந்தேன்...என்னோட அப்பாவிடம் இதுபோன்ற விஷயங்களை பேசும் தைரியமும் கிடையாது...பெயில் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறவனுக்கு என்ன செல்வாக்கு இருக்கமுடியும்...அவரோட பத்து சைஸ் செருப்பை மூஞ்சிக்கு அருகில் பார்க்கத்தான் முடியும் என்ற முன்முடிவுக்கு வந்திட்டேன்..ஒருவேளை சொல்லி இருந்தால் கல்யாணத்தை அருமையாக நடத்தி வைத்திருப்பாரோ என்னவோ...ஸ்டேஷன்ல பல கல்யாணம் நடத்திவெச்சிருப்பாரு தானே..பொது அறிவும் கிடையாது...பையில் காசும் கிடையாது...உள்ளூர தைரியமும் கிடையாது...அவனும் சீக்கிறத்திலே புரிந்துகொண்டான்...சரிடா....நீ உன்னோட அப்பாகிட்ட சொல்ல முயற்சி செய்...நான் மாயூரத்தில இருக்க எங்க சித்தப்பாவிடம் போறேன் என்று போயே போய்விட்டான்...அதுதான் நான் கடைசியாக பார்த்தது...

அப்படியே கொஞ்சம் பார்ஸ்ட் பார்வர்ட்...அதுக்கு பிறகு சென்னைக்கு போய் - வெட்டியா திரிஞ்சு - வாழ்க்கைப்பாடத்தை தி நகர் ரங்கநாதன் ஸ்ட்ரீட் பி.ஆர்.எஸ் மேன்ஸனில் படிச்சு, பசியை அனுபவிச்சு..ஆங்கிலம் பேச பழகி - ஒரு வழிகாட்டி மூலமா வேலைக்கு போய் - மைக்ரோஸாப்ட் டெக்னாலஜியில கோடிங் எழுதி - ரிமோட் டெஸ்க்டாப்ல யூ.எஸ்ல இருக்க கணிப்பொறியை திறந்து வேலைசெய்து - பாம் பாக்கெட் பிஸிக்கு மோட்டரோலா கோடுவாரியரில் கோடிங் எழுதி - கிளையண்டோட சேட் செய்து - சேலரி ஹைக் - யாகூ மெஸஞ்சர் என்று ஜல்லியடித்து - பெங்களூர் டெலெபோனிக் இண்டர்வீயு தேறி - ஸாஸ்கன் நிறுவணத்தில் இணைந்து - வாழ்க்கையை திரும்பி பார்க்கிற அளவுக்கு போனபோது ஐந்து வருடம் கடந்துவிட்டிருந்தது...

திடீர்னு பழைய விஷயங்களை எல்லாம் புரட்டிக்கிட்டிருக்கும்போது எழிலோட ஒரு லெட்டர்..பிரிக்காமல் இருந்தது...தேதி பார்த்தால் 1999 ஆகஸ்டில் ஒரு தேதி...அம்மா அம்மா என்று அலறி..ஏம்மா இந்த லெட்டரை எனக்கு கொடுக்கல்ல...என்று எகிறியபோது...டேய், அது நீ காலேஜ்ல இருக்கும்போது வந்ததுடா...நீ வரும்போது கொடுக்கலாமேன்னு பெட்டியில் போட்டுவெச்சிருந்தேன்...என்றார்...

அவசரமாக பிரித்தபோது, தான் ஓசூரில் பணியில் இருப்பதையும், ஒரு முக்கியமான விஷயமாக என்னை சந்திக்கவேண்டும் என்றும், தன்னோட ஆபீஸ், வீட்டு முகவரி எல்லாம் எழுதி இருந்தான்..அதாவது இந்த கடித்தத்தை என்னை வந்து கடைசியாக சந்திக்கும் முன் எழுதி இருக்கிறான்...

அடுத்த வீக் எண்ட்...பைக்கை எடுத்துக்கிட்டு ஒரு பத்து லிட்டர் பெட்ரோல் அடிச்சுக்கிட்டு கிளம்பிட்டேன் ஓசூருக்கு...முதலில் பாகாலூர் ரோடு...அவன் வேலைசெய்த ஷேர் ட்ரேடிங் (ப்ரோக்கிங்) நிறுவனம்...இன்னும் இயங்கிக்கொண்டுதானிருந்தது...ஒரே ஒரு ரிசப்சனிஸ்ட் மட்டும் இருந்தார்...

எழிலா...ஆமாம், பழைய ஸ்டாப்...மேரேஜ் கூட இங்கேயேதான் இல்ல..ஆனா அவர் டீடெய்ல்ஸ் எதுவும் இல்லையே..நீங்க வேணா சார் வருவார்...வெய்ட் பண்ணி பார்த்து கேட்டுக்கோங்க..என்றார்...

இன்னொரு ஸ்டாப் உள்ளே நுழைந்தார்...இந்த கம்பெனியில இருந்து நெறைய பேர் பெங்களூர்ல தான் சார் ஜாய்ன் பண்ணாங்க...நீங்க பேங்களூர்ல விசாரிக்கலாமே...

நான் அங்கே இருந்துதான் மேடம் வர்றேன்...என்றேன்..சுருக்கென..

அந்த நிறுவனத்தின் 'சார்' வருவார் என்று காத்திருந்தது தான் மிச்சம் மாலை மங்கும் வரை...வரவேயில்லை...மொபைல் நெம்பர் சுவிட்சுடு ஆப் என்ற தகவலை கொடுத்தது..வீட்டையாவது தேடலாமே என்று போனபோது ஏமாற்றத்தின் உச்சத்துக்கே போனேன்..பதினாலு சீயா..அது பழைய நெம்பர் சார்...புது நெம்பர் இருக்கா...அஞ்சு வருஷம் முன்னால இங்கெ நாலுவீடுதான் சார் இருந்தது...இப்போ ஆயிரம் வீட்டுக்கு மேல இருக்கே என்றார் கொஞ்சம் விவரம் அறிந்தவர்...

ஆயாசமாக இருந்தது...கொஞ்சம் சுத்தி விசாரித்து பார்க்கலாம் என்று பைக் நுழையாத தெருவெல்லாம் போய் பதினாலு சீயை தேடி இருட்டும் வரை சுற்றியதில் கடைசியில் இரண்டு மணி நேரம் முன்பு விசாரித்தவரிடமே திரும்பி கேட்டேன்...

சார் இன்னும் நீங்க தேடிக்கிட்டேவா இருக்கீங்க...கடையாண்ட கேட்டீங்களே...நாந்தானே சொன்னேன்..என்றார்...

திரும்ப வீட்டுக்கு வந்து தடாலென கட்டிலில் விழுந்தபோது ஏனென்று தெரியாமல் சிறிய கண்ணீர்துளி...அதை விடுங்க...உங்களை எல்லாம் ரொம்ப போரடிச்சுட்டேனா...

ஒரு ரெக்வஸ்ட்...நீங்க ஷேர் மார்க்கெட், பங்கு சந்தை, நெய்வேலி, மாயூரம், பெங்களூர், எங்கேயாவது எழிலரசன் அப்படீங்கறவரை பார்த்தா...எக்ஸ்கியூஸ் மீ...உங்களுக்கு ரவியை தெரியுமா ? நெய்வேலியில உங்களோட படிச்சாரே..அப்படீன்னு கேளுங்க...

கோழித்திருடன்.........

சில விஷயங்கள் வெளியில வந்தாகவேணும் என்றால் வந்தே தீருமாமா ? உண்மையா ?

திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் பயணம் செய்தா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...

இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...

எங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...

நாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...

பத்து ரூவாயை வைத்து - கிழவணார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...

மற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது....

இந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...

கிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு கிழவணார் வீட்டுப்பக்கம் போறேன்...

தெரு முக்குல - கண் நிலை குத்துது...

செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுது...

அட இன்னாடா இது...போனவாரம் கண்ணுல படல..எவனோ புதுசா வாங்கிட்டு வந்திருக்காண்டோய்...

ஆவறதில்லையே இது...என்று சீட்டாட்ட கிளப்புக்குள் ( நம்ம கிழவணார் வீடுதான்) நுழைகிறேன்...

ஆட்டத்துல மனசே போவல...எப்படி அந்த கோழியை பிடிச்சு மொக்கறது (திங்கறது) என்பதுலேயே சுத்துதுடோய்...

ஆச்சு...கிழவணார் - ரெண்டு புல்லு தூக்கினார்...பிறவு ஒரு ஸ்கூட் அடிச்சார்...பத்துரூவா போச்சு.....

கிழவணார் கிட்ட சுட்ட ஒரு சுருட்டை பத்தவச்சிக்கிட்டே - யோசனையா வரேன்...நம்ம பங்காளி கோபு - திருக்கோவிலூர்ல இருக்கான்...

ஒம்போது மணி மினி பஸ் டிரைவர் அண்ணாச்சிக்கிட்ட தகவல் சொல்லிவிடுறேன்...போன் எல்லாம் ஏது எங்கூருல..அதுலயும் கோடு வேர்டு தான்...

அண்ணாச்சி...நாளைக்கு முனியப்பசாமிக்கு படையல் போடனும்...என் பங்காளி கோபு இல்லைன்னா கோபி - பஸ்டாண்டுல திரியுவானுங்க...கொஞ்சம் சொல்லிவிட்டுடுங்க...காலையில வெரசா வந்துடச்சொல்லுங்கப்பு...

என்றேன்...

கிழவி வீட்டுக்கு போய் - அது வைத்திருந்த காரக்குழம்பை ஒரு வெட்டு வெட்டிட்டு - முற்றத்தில் கட்டையை சாய்த்தேன்..

டேய்...டேய்...ஏந்திருடா என்று கோபுவும் ( இப்போது ஊரில் விவசாயம் பார்க்கிறார்)- கோபியும் ( இப்போது இவர் போலிசாக இருக்கிறார்) எழுப்பினாங்க..

பொட்டையா - சாவலா : என்னம்மோ உலக அழகி போட்டியில கலந்துக்கப்போற கோழி மாதிரி ஆர்வமா விசாரிக்கானுங்க...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கிழவி இன்னும் கொல்லிக்கு போவல...கொஞ்சம் இருங்க டோய்...என்றேன்..

கிழவி கிளம்பியது....

தூம்பாவுல இருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்...பல்லு விளக்கவில்லை...

அவ் அவ் அவ் அவ் என்று அரிசியை மெல்லாமல் குதப்புகிறேன்...

மெல்ல கிளம்பி போகிறோம் மூன்று பேரும்...

கோபி - பொட்டிக்கடைக்கு போயி எண்ணையை ஒரு கவரில் கட்டிக்கோ - மொளகாத்தூள் ஒரு கவரில் வாங்கிக்கோ - அப்படியே காட்டு கொல்லிக்கு வந்திடு...நம்ம இடத்துக்கு...என்றேன்..

உப்பு - மஞ்ச தூள் ??? என்றான் கோபி...

அது ஏற்க்கனவே பாலித்தீன் கவரில சுத்தி வைச்சிருக்கோம்....என்றான் கோபு...

டேய் கோழியக்காட்டுங்கடா...கோபு அவசரப்படுறான்...

இரு ராசா...கொஞ்சம் பொறு...இது நான்...

ஆங்...அதோ மேயுறான் பாரு...

சிவப்பு நிறத்தில் கும்முனு இருக்கு சாவல்...

அப்படியே வாயில் குதப்பிக்கிட்டிருந்த அரிசியை துப்புறேன்...பக்கத்தில்..

பொ..பொ...பொ...பா.....

அரிசி கிட்ட வருது சாவல்...

லபக்..லபக் னு பொறுக்குது...

அஞ்சே நிமிஷம்...

லைட்டா தள்ளாடுது...

டேய் கோபு...தெருவுல யாரும் இல்லை....அமுக்குடா...என்றேன்...

கையோடு கொண்டுபோயிருந்த சிமெண்ட் சாக்கில் அய்ட்டத்தை - கொஞ்சம் கழுத்தை திருகி - உள்ளே அனுப்புறோம்...

அப்புறம் - பரபரன்னு எங்க ரெகுலர் இடத்தில் சந்திப்பு...காட்டுக்கோயில் அருகே...

எங்க ஆப்பரேஷன்களுக்காக தயாராக - ஒரு புதரில் ஒளியவைத்திருக்கும் - வாணல் - கரண்டி வெளியே வருகிறது...

சுள்ளிகளை கொண்டுவருகிறான் - கோபி..

கோழியை உரித்து - மஞ்சள் தடவி லைட்டாக தீயில் காட்டி - பிறகு பீஸ் போட்டு - மிளகாய்தூள் - உப்பு போட்டு - எண்ணை சட்டியை வத்து - வேலை ஜரூராக நடக்குது...

இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கட்டையை எடுக்கிறான் கோபு....ஏற்க்கனவே குடித்து மீதி வைத்திருந்த வாத்தை - புதரில் இருந்து எடுத்து வருகிறான் - கோபி...

( கட்டை : குவார்ட்டர் - காரணம் குள்ளமா இருக்கில்ல... வாத்து - புல் பாட்டில் சரக்கு - காரணம், ஓப்பன் செய்யும்போது - வாத்து கழுத்தை திருகுவது மாதிரி திருகனும் இல்லையா)

வேலை முடிஞ்சது...

பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்து கட்டையை மீண்டும் சாய்க்கிறேன்...

சாயங்காலம் - கிழவி லபோதிபோ என்று அலறும் சத்தம் கேட்டு எழுந்துகொள்கிறோம்...

பாடையில போவ...கட்டையில போவ என்று சென்சார் செய்யாத வார்த்தைகளை அள்ளி தெளித்துக்கொண்டிருக்குது எங்க ஆயா...

மண்ணை வாரி விட்டு சாபம் கொடுத்துக்கிட்டுருக்கு.....

ஓ..ஆயா...நிறுத்து...இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி கூவுற...என்றேன்..

கம்முனாட்டி..எடுபட்ட பய..படுபாவி - சாண்டாக்குடிச்சவன்  - கட்டியத்தின்னவன் - கட்டையில போவ என்று மீண்டும் ஆரம்பிக்குது...

தே, என்னா ஆச்சு மொதல்ல சொல்லு அத்த...என்றேன்..

போனவாரம் சந்தையில ஒரு கோழி வாங்கி வச்சிருந்தேன் டா..பாவிப்பய எவனோ அத்தை திருடி தின்னுப்புட்டான்...எடுபட்ட பய..

ஆடு மேய்க்கிற பசங்க - செவப்பு சாவல் ரெக்கை காட்டு கோயில் பக்கம் கிடக்குன்னு சொல்லுறானுங்க...

பாடையில போவ...கட்டையில போவ....என்று மீண்டும் ஆரம்பிக்குது...

சரி சாவனை விடாத ஆயா...எந்த நெலமையில நம்ம வீட்டு சேவல்னு தெரியாம திருடி திருடினானுங்களோ...என்றேன்...

வெற்றியென்பது யாதெனில்...

உண்மையான வெற்றியென்பது யாதெனில் எழுகிறாயே நீ ஒவ்வொருமுறை விழும்போதும்...அது தான்...அது மட்டும்தான்....இந்த சுட்டியை பாருங்கள்...விரும்பினால் கருத்து சொல்லுங்கள்..

http://www.the-race-movie.com/

தேங்காய் பொறுக்கி !!!!!!

நட்சத்திர வாரத்தில் ஒரு மீள் பதிவாவது போடனும் என்று ஏதோ ரூல்ஸ் இருக்காமே....பொன்ஸ் சொல்றாங்க...அதனால எனக்கு பிடிச்ச ஒரு பதிவை மீள்பதிவாக்குகிறேன்....நிறையபேர் சொல்வது "கோழித்திருடன்" பதிவை நீ நல்லா எழுதி இருக்கடா என்பது தான்...ஆனால் என் நன்பன் விஜயராகவனுக்கு பிடித்த பதிவு இது தான்..அதனால்...பிடிங்க மீள்பதிவு...இனி ஓவர் டு மீள்பதிவு...

**************************************************************************

எல்லாரும் ஒரு முறையாவது செய்திருப்பீங்க...சும்மா மறைக்காதீங்க...என்னாது...அப்படியெல்லாம் இல்லையா...சரி பரவாயில்லை...நான் என் மேட்டரை சொல்லுறேன்..

சம்பவம் நடந்து சுமார் 15 வருடம் இருக்கும் நான் அஞ்சாப்பு (5th) படிச்சேன் என்று நியாபகம்...சில நன்பர்களோட கோயில் பக்கமா போயிருந்தேன்...

ஏதோ பண்டிகை நாள்...

கோயில் வாசலில் ஒரு கருங்கல்...தேங்காய் உடைப்பதற்க்கென்றே போல...

அய்யரா - அருணாச்சலமா தெரியவிலை...

ஒரு தேங்காயை கொண்டுவந்து - படார் என்று உடைத்தார்..

என் கூட இருந்தவனுங்க ஓடி ஓடி பொறுக்கினாங்க..

நான் கொஞ்சம் தேமே என்று வேடிக்கை பார்த்தேன்...

என்னோட கூட வந்த ஒட்டு என்றழைக்கப்பட்ட - ஜஹாங்கீர் பாய்க்கு ஒரு முழு பீஸ் கிடைத்தது - அதாவது தேங்காயில் அது பாதி...

ஹிஹி என்று இளித்துக்கொண்டு மென்றான்...

அடுத்த தேங்காயை கொண்டுவந்து உடைத்தார்...

பரபரவென பசங்க ஓடினாங்க...

இந்தமுறை - ஒரு புதிய தோழர் அந்த ரேஸில் கலந்து கொண்டார்...

அட - நாந்தாங்க அது...

தவ்வி - பாய்ந்து - தாவியதில் - அதிஷ்டமோ என்னம்மோ தெரியவில்லை - அகப்பட்டது பெரிய துண்டு ஒன்று...

வெற்றி வெற்றி வெற்றி.... !!!!!!

வீடு திரும்பி அம்மா கொடுத்த அடுத்த வீட்டு பலகாரங்களை தின்று கொண்டே காமிக்ஸ் புத்தகம் ஒன்றை 154 ஆவது தடவையாக படிக்க ஆரம்பித்தேன்...

அப்பா வீடு திரும்பும் நேரமாச்சு...

அம்மா - உஷார் செய்ய - பாட புத்தகம் ஒன்றை எடுத்து கையில் வைத்துக்கொண்டு

ஆக்டிங் - ஸ்டார்ட்டிங்.......

உள்ளே வந்த அப்பா - முதலில் வாசல் கதவை அடைத்தார்...

பிறகு - தோட்டத்து பக்கம் உள்ள கதவை அடைத்தார்...

பிறகு எதையோ தேட ஆரம்பித்தார்...

நான் கேட்டேன்...என்னப்பா தேடுற என்று...

அட இங்கே தாண்டா இருந்தது...ஆண்டனா கம்பிங்க...என்றார்..

<< அப்போது : டீ.வி ஆண்டனா போய் கேபிள் வந்திருந்த காலம் - அதனால் பழைய ஆண்டணா கம்பிகளை தான் தேடுகிறார் >>>

அட அதுவாப்பா - மாடியில இருக்க ஸ்டோர் ரூமில இருக்கு என்றேன்...சொன்னதோடு இல்லாமல் - படபடவென மாடியேறி எடுத்தும் வந்திட்டேன்...

எடுத்துவந்து - கையில் கொடுத்தது தான் தாமதம் - சும்மா விழுது பாருங்க அடி...

டமால் டுமீல்... அய்யோ யம்மா என்று நான் அலற....

அத்தோட இல்லாமல் - மொத்தமாக முடியை பிடித்து தூக்கி - லெப்ட் கையால் ஒரு அடி கொடுக்கிறார் கண்ணத்தில்...<<< அவர் இடக்கை பழக்கமுள்ளவர்>>>

ஜிவ்வ்வ்வ் என்று தலையை சுற்றி பட்டாம்பூச்சி பறக்குது...

ஏண்டா - தேங்காயா பொறுக்கற....பொறுக்கி.....என்று...

காப்பாற்ற முயற்ச்சி செய்யும் அம்மாவிற்க்கு கையில் ஒரு ஆண்டனா அடி விழுது...அதனால் அவர் ஒதுங்கி கொள்கிறார்...

மேலும் ஒரு நாலு சாத்து - முதுகில் ரெண்டு மாத்து...

விஷயம் என்னான்னு கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிகிறது...

அதாவது அவர் அந்த வழியாக ஜீப்பில் வந்திருக்கார்...அவரோடு மற்ற போலீசாரும் வந்திருக்காங்க...

அப்போ ஒரு ஏட்டைய்யா என்னை கவனிச்சிட்டார்...அவர் என்னை பார்க்கும் சமயம் சரியாக நான் தேங்காய் பொறுக்க பாய்ந்து கொண்டு இருக்கிறேன்...

உடனே - அய்யா - பாருங்க உங்க மகன் - தேங்காய் பொறுக்குவதில் வெற்றி அடைஞ்சிட்டான் என்கிற மாதிரி ஏதாவது சொல்லி இருக்கனும்...

அழுதபடி தூங்க போய் - அடுத்த நாள் - காலையில் வலியோடு எழுந்தேன்...

காலையில் சூடாக இட்டிலி தட்டில் வைத்தார் அம்மா...

என்னா தொட்டுக்க என்றேன்...

தேங்காய் சட்டினி என்றார் அம்மா சமயலறையில் இருந்து...

அவர் உள்ளேயிருந்து வெளியே வந்து கண்டிப்பாக யோசித்திருப்பார்...

இட்டிலியை வச்சிட்டு இந்த பையன் எங்கே ஓடினான்....??

Tuesday, December 05, 2006

உங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா..

உங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா என்று கேட்டால், பாலபாரதியை தெரியும்...அவர் கவிஞரா என்று கேட்பவரும் உண்டு...சிலபேர்...எங்கியோ கேட்ட பேரா இருக்கு...ஆனா சரியா தெரியலை...என்பார்கள்...நான் சொல்வது வலைப்பதிவர்களை அல்ல...வலைபதியாதவர்களை சொல்கிறேன்...

எனக்கு தெரியும்...

சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது கிழக்கு பதிப்பகம் சென்று பாலாவை சந்தித்தேன்...அப்போது அவர் எழுதிய "இதயத்தில் இன்னும்" என்கிற குறுங்கவிதை (ஹைக்கூ) தொகுப்பை பரிசளித்தார்...இதயத்தில் இன்னும் இருக்கின்றன சில கவிதைகள்....அட்டைப்படத்தில் மேலிருந்து கீழாக சற்று கோணலான பாண்ட்டில் இருந்த தலைப்பை பார்த்துவிட்டு என்னுடைய அண்ணன், என்ன கன்னட புக்கா ? என்று கேட்டுவைத்தான்...பிறகு புத்தகத்தின் பின் அட்டையை பார்த்து அதில் இருந்த ஒரு கவிதையால் மனம் கவரப்பட்டு முழுமையாக படித்து முடித்தபிறகே கீழே வைத்தான்...

அந்த கவிதை...

சமத்துவபுரம்...
கழிவுநீர் சுத்தம் செய்ய..
அதே கருப்பன்...

கவிதை என்றாலே தெறித்து ஓடும் ஒரு நபர் (அதான் என்னோட அண்ணன்) ஒரு கவிதை புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தான் என்றால் அந்த எழுத்தின் வீச்சும், சொல்லின் தரமும் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை...

சமூகம் பற்றித்தான் எழுதுவாரா என்று கேட்டால் அதுதான் இல்லை...காதலும் எழுதுகிறார்...அரசியலும் எழுதுகிறார்...சோகமும் எழுதுகிறார்...இயற்கையும் எழுதுகிறார்...தனிமையும் எழுதுகிறார்...

வந்துவிடுவாளோ அவள்...
தோட்டத்தில் காத்திருக்கும்...
இன்று பூத்த ரோஜா...

ஊழல் மந்திரி...
கறைபட்டிருக்குமோ...
அவர் ஏற்றிய தேசியக்கொடி...

இரவு முழுதும்
விழித்திருக்கவேண்டும்...
வானில் தனியே நிலா...

முள்வேலியிட
மனமில்லை...
கிழிபடுமோ காற்று...

மொட்டையாய் காடுகள்...
கோபுரங்களில்...
பறவைகள்...

விறகு விற்க...
பேரம் நடந்தது...
மர நிழலில்.....

புதிய நிலம்...
புதுப்பண்ணையார்...
பழைய கூலி...

புரியாத ஊர்...
புரியாத மொழி...
ஆறுதலாய் அதே நிலா...

குடிநீர் வசதியற்ற
கிராமம்...
உபசரிப்புக்கு "பெப்ஸி"

அவரை சந்தித்தபோது மதியம் லஞ்சுக்கு கிழக்கு பதிப்பகத்துக்கு பக்கத்தில் உள்ள ஒரு உணவகம் போனோம்..ஆழமாக பேசுகிறார்...அனானி பின்னூட்டம் வந்தால் அது யாரையாவது புண்படுத்தும் என்று தெரிந்தால் அனுமதிக்கவேண்டாம் என்று திட்டினார்...அல்லது செய்யுங்கால் முகம் பார்த்து உரைக்க நெஞ்சில் துணிவு வேண்டும் இல்லையா...அது கண்டேன்...சரி சரி என்று ஆமோதித்துக்கொண்டேன்...

பார்த்தவுடன் பலகாலம் பழகியதுபோல் பட்டென ஒட்டிக்கொள்ளும் மனப்பாங்கை சொல்ல மறந்துவிட்டேனே...வாய்யா...என்று சொல்லி தோளில் கைபோட்டு பேசும் மனநிலை எல்லோருக்கும் வந்துவிடாது...உள்ளத்தில் கள்ளமில்லாத வெள்ளந்தி மனிதர்களுக்குத்தான் அது கைவரும்...

சமூகம், அரசியல், கொள்கை எல்லாவற்றிலும் ஒரு தெளிவான மனப்பாங்கு கொண்டவர்...நான் சொன்ன ஒரு சில விஷயங்களையும் வெட்டி விவாதம் செய்யாமல் உடனே ஏற்றுக்கொண்டார்...இது வலைப்பதிவர்களிடம் இல்லாத விஷயமாச்சே...

அவர் கவிதை ஒன்றை கடைசியாக (புத்தகத்திலும் இதுவே கடைசி) சொல்கிறேன்...

கிணற்றுத்தவளைதான்...
நம்பிக்கையிருக்கிறது வாழ்வில்...
நிமிர்ந்தால் தெரியும் வானம்....

தமிழ்மணத்தில நட்சத்திரம் நீ....இன்னொரு நட்சத்திரம் பற்றி எழுதாதே என்றார் ஒரு நன்பர்...நான் அதை மறுத்தேன்...காரணம் சொல்லவா....

இவன் கிழக்கில் மலர்ந்த சூரியனாச்சே !!!!

தென் பெண்ணையின் செல்(லொள்)வன்...

இந்த நிகழ்ச்சி நடந்து சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு அப்புறம் கல்கியின் அமரகாவியம் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில் உள்ள காரெக்டர் காவிரி ஆற்றின் சுழலில் மாட்டி, தப்பிப்பதை காவிரித்தாய் கரை சேர்ப்பதாக அருமையாக எழுதி இருப்பார் கல்கியார்...(ஒரு புள்ளியையும் எழுத்தையும் மாத்திப்போட்டா..சும்மா டைம் பாஸ் மச்சி !!!)

நான் இவ்வளவு நாள் லொள்ளு செய்ய இந்த சம்பவமும் ஒரு காரணம்..ஆமாம் பிறகு...இப்போ செய்யுற இந்த லொள்ளு எல்லாம் செய்ய நான் இருந்திருக்க மாட்டேனே...விஷயத்தை படிங்க... கொஞ்சம் லைட்டா மத்த விஷயங்களை போட்டுட்டு கடைசியா மேட்டருக்கு வரேன்...

முதல் படகு முயற்ச்சி

இது வேறு சம்பவம்...ஆனால் முந்தின சம்பவத்தோடு தொடர்புகொண்டது...வீடு கட்ட நிலம் பார்ப்பதற்க்காக ஒரு காரில் திருக்கோவிலூருக்கு பக்கத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் என் குடும்பமும் என் மாமா குடும்பமும் சென்றிருந்தோம்....பெரியவர்கள் எல்லாம் நிலம் பார்த்துக்கொண்டிருக்க, சில்வண்டுகளாகிய நாங்கள் ( அத்தை பிள்ளைகள் இரண்டுபேர், நான், அண்ணன்) எல்லாரும் பக்கத்தில் விளையாட ஓடினோம்...பெற்றோர் நின்றிருந்த இடத்தில் இருந்து வெகுதூரத்தில் செங்கல் சூளை வைக்க மண் அள்ளிய குழியில் தளும்ப தளும்ப தண்ணீர்...அருகிலே கீழே விழுந்த ஒரு பனைமரம்...அதை பார்த்தவுடன் பனை மரத்தை வைத்து படகு விடலாம் என்று ஒரு திட்டம்...மற்றவர்களை காத்திருக்க சொல்லி, நான் மட்டும் இறங்கினேன்...முதலில் பனைமரத்தை தண்ணீரில் தள்ளி அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது ப்ளான்...

தண்ணீரில் தள்ளியதும் பாதி முழுகிய நிலையில் இருந்த பனை மரத்தில் ஏறி நான் அமர சற்று தூரம் சென்றதும் படகு நிலை தடுமாறியது...சற்று சமாளிக்க முயன்றேன்...ஆழம் எவ்வளவு என்றே தெரியவில்லை..திடீரென படகு நிலை தடுமாறி தலைகீழாக கவிழ படகுக்கு அடியில் நீச்சல் தெரியாத நான்...பனைமரத்தை பிடித்து மேலேற முயல, அது சுழன்று சுழன்று பிடிகொடுக்காமல் கீழே வீழ்த்தியது...

மேலே இருந்த மற்ற பிள்ளைகள் அலற, சூளை வேலை செய்துகொண்டிருந்த கிழவன் ஓடி வந்தார்...எனக்கு எதுவும் நினைவில்லை...மயக்கம் தெளிந்து ஈர உடையுடன் காரில் ஏற முயன்ற என்னை காரில் ஏறாதே என்று கோபமாக அப்பா சொல்ல..நான் அழ......என்ன கொசுவத்தி சுத்துற எபக்ட் கிடைக்குதா ?

உப்புமாவுக்காக கொலைவெறி தாக்குதல்

பள்ளி முடிந்து வந்தவுடன் அம்மாவுக்கு ஒரு பழக்கம்...ஏதாவது சாப்பிட கொடுப்பாங்க...வீட்டில் இருவர் இருப்பதால் (நான் மற்றும் அண்ணன்) - பாப்பா பிறக்காத நேரம்...இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தின்பது வழக்கம்..அன்றொரு நாள், பள்ளியில் இருந்து வந்தேன்...உப்புமாவை என்னுடைய பிரதர் சாப்பிட்டுக்கொண்டிருதான்...அம்மா எனக்கு ? என்றேன்..அவன் சாப்பிட்டு மீதி தருவான், என்று சொல்ல...நான் அப்படியே வெளியே ஏதோ விஷயமாக சென்றேன்....திரும்பி வந்து பார்த்தால் உப்புமா வாணல் காலி...

அம்மாவிடம் கேட்டால் அவன் சாப்பிட்டுட்டானே...உனக்கு கொடுக்கல்லியா...என்றார்...கடுங்கோபம் பிரதர் மீது..உடனே வெளியே சென்று கொட்டி வைத்திருந்த கல் குவியலில் இருந்து கொத்தாக பாக்கெட்டில் கற்களை நிரப்பி, தொலைவில் விளையாடிக்கொண்டிருந்த அண்ணனின் மேல் வீச...அவன் ஓட...நான் துரத்தி வீச....தண்ணீர் இல்லாத காலி தென்பெண்ணை ஆற்றில் அவன் இறங்கி ஓட...நான் மணலில் இறங்கி துரத்த...கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி...சோர்ந்து...பிறகு இரவில் வீடு திரும்ப...

அதற்க்குள் வீடு திரும்பிய பிரதர் எல்லா மேட்டரையும் அப்பாவிடம் கக்கிவிட...உப்புமாவுக்கு பதில் நல்ல மாத்து கிடைத்தது...எப்போது பென்ணையாற்றை நினைத்தாலும் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து க்ளுக் என சிரிப்பது வழக்கமாகிவிட்டது...

மனதுக்கினிய தூண்டில் சிகரெட்டே

கல்லூரி முடிந்தவுடன் வீட்டில் வெட்டியாக ஒருவருடம் சுற்றியது என்னுடைய சிறப்பான சாதனைகளில் ஒன்று...காரணம் பாடத்தில் நான் வைத்த அரியர்...மேற்படிப்புக்கு போகமுடியாத நிலை...வேறு வழியில்லை...தென்பெண்ணை ஆற்றில் புகைப்பிடித்துக்கொண்டு சுற்றுவதை தவிர வேறெதுவும் அறியோம் யாம்...தூண்டில் போட்டு மீன் பிடித்தல், துப்பாக்கி எடுத்துக்கொண்டு வேட்டைக்கு போவது, ஆற்றில் குளிப்பது, மொட்டை மாடியில் படுத்து உறங்கி, சூரியன் முதுகை சுடும்போது கைப்பிடி சுவர் நிழலில் ஒதுங்கி, வேறு வழியில்லை, உச்சத்தில் சூரியன் முதுகை சுட, இனி தூங்க முடியாது என்ற நிலை வரும்போது, கீழே வந்து அறையில் படுத்து உறங்குவது, இது தவிர அறிந்ததும் அறியாததும் ஏதுமில்லை...1999 ஆம் ஆண்டு முடிந்து 2000 ஆண்டு பிறந்ததும் எதிர்காலத்தை பற்றிய பயத்தில் கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவது என்று முடிவு செய்து, முதலில் சிகரெட் பழக்கத்தை விடுவது என்று உறுதி எடுத்துக்கொண்டேன்...

உறுதியென்ன...விட்டே விட்டேன்...பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு வாரம் விடுமுறையில் வீட்டுக்கு போனபோது, எங்கும் மழை வெள்ளமாய் இருந்தது...காடு கரையெல்லாம் தண்ணீர் நிரம்பி வழிந்தது...எங்கள் நிலத்தில் நெற்பயிருக்கு மேலே ஒரு ஆள் அளவுக்கு தண்னீர் போவதாக பணியாளர் வந்து தகவல் தெரிவித்தார்...எங்கெங்கு காணினும் ஏரிகள் உடைப்பெடுத்து வெள்ளக்காடு...

மழை விட்டு வெள்ளம் வற்றி ஒரு நாள் ஆனது...சிறுவர்கள் ஒரு அருமையான விஷயத்தை அறிவித்தார்கள்...அதாவது ஏரியில் இருந்து தண்ணீர் வழிந்தோடியபோது, அதில் இருந்த மீன்கள் அடித்துவந்து அருகாமையில் இருந்த கிணத்தில் ஏறிவிட்டதாகவும், (அதாவது இறங்கி), அதில் தூண்டில் போட்டால் ஏராளமான மீன்கள் கிடைப்பதாகவும்...

களத்தில் இறங்கினோம்...ஐடி எஞ்சினீயர் என்பதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ( நாம எப்போ அதை பார்த்திருக்கோம்), கைலி சட்டையோட தூண்டில் போட கிளம்பியாச்சு...அங்கே போனால் வட்டமான ஒரு கிணறு..சுற்றிலும் மரங்கள்...அது கைவிடப்பட்ட கிணறு என்பதை அதன் உடைந்த சுற்றுச்சுவர் உணர்த்தியது...ஏற்கனவே பயல்கள் தூண்டிலில் அமர்ந்து கலக்க ஆரம்பித்திருந்தார்கள்....நானும் அமர்ந்தேன்....ஒரு மணிநேரத்தில் பை முழுக்க மீன்கள்...அத்தை மகன் அருகில் வந்து உட்கார்ந்தான்....மெதுவாக ஒரு சிகரெட் பற்றவைத்தான்...என்ன சிகரெட்...என்றேன்...பில்டர்...என்றான்...அது நான் சில பல ஆண்டுகளுக்கு முன் மனதுக்கினிமையாக புகைத்துக்கொண்டிருந்த அதே ப்ராண்ட்...மெல்ல நான் ஒன்றை எடுத்து பற்றவைத்தேன்....

தலைப்பை ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்க...

பென்னைத்தாய்

கடைசியா விஷயத்துக்கும் வந்தாச்சு...ப்ளஸ் 2 பரீச்சை முடிச்சு விட்டில் இருந்த காலகட்டம்..அருமையா மழை பேஞ்சு காடுகரை எல்லாம் வெள்ளமாக கடக்கு...சாத்தனூர் அணை நிரம்பி விட்டதால் பென்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதாக பேப்பரில் காலையில் படித்தேன்...ஏற்கனவே ஆற்றில் அளவுக்கு மழைத்தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருந்தது..ஆனால் ஆறு நிரம்ப ஓடவில்லை...கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றில் சத்தனூர் டேம் திறந்தால் இரு கரையும் நிரம்ப ஓடிவரும் தண்ணீரை பார்க்க அருமையாக இருக்கும்..அதில் இறங்கி குளிப்பது அல்லது நீந்துவது மிகவும் பிடித்தமான விளையாட்டு எங்களுக்கு...

நான் அண்ணன், அத்தை பையன் ப்ரபா மூவரும் ஆற்றில் ஆட்டம்போட கிளம்பிவிட்டோம்...அண்ணனும் ப்ரபாவும் சற்று முன்பே கிளம்பிவிட்டிருந்தார்கள்...நான் பின்னாலேயே போனேன்...ஆற்றில் இரு கரையும் நிரம்பி கடல்போல அதிவேகத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது...

எவ்ளோ ஆழம் இருக்கும் என்று பக்கத்தில் நின்றிருந்த பயலை கேட்டேன்...என்ன ஒரு ரெண்டாள் ஆழம் (3 மீட்டர்) இருக்கும் என்று சொல்கிறான்...கண்கள் என் அண்ணனையும் ப்ரபாவையும் தேடுது...ஆனால் அவன்களை ஆளை கானோம்...வழக்கமாக குளிக்கும் முருகம்பாறையில் பயலுக இல்லை...மெல்லமாக ட்ரெஸை பக்கத்தில் இருந்த ஆலமரத்துக்கடியில் நாங்கள் வழக்கமாக வைக்கும் இடத்தில் கழட்டி வெச்சுட்டு நான் மட்டும் இறங்குகிறேன்...ஏற்க்கனவே இதுபோல புரண்டு வரும் வெள்ளத்தில் மற்ற பசங்களோட நீந்தி எதிர்நீச்சல் விளையாட்டெல்லாம் விளையாடியிருந்ததால் பயம் ஏதும் இல்லை...

கரைக்கு கொஞ்சம் அருகில் இருந்த ஒரு பாறையை நீந்தி போய் பிடிச்சிக்கலாம்...அப்போதான் பசங்க எங்க குளிக்கிறானுங்க என்று தெரியும் என்று சற்றே நீந்தி போய் பாறைக்கருகில் போவதுக்கு முயற்சி செய்ய, காலுக்கடியில் பத்து பேர் பிடித்து இழுப்பது போல் ஒரு உணர்வு...பாறைக்கு போகும் முடிவை கைவிட்டு திரும்ப கரைக்கே வரலாம் என்றால் அதுக்கும் பாறை, நான் ஆற்றில் இறங்கிய இடம் எல்லாம் கடந்து தண்ணீரில் போய்க்கொண்டிருக்கேன்..

எதிர்த்து நீந்த முயற்சி செய்து தோல்விதான்...கைகள் சோர்ந்து போனது...நுரையோடு புரண்டு வரும் தண்ணீர் முகத்தில் அறைகிறது...கரை தூரம் தூரம் தூரம் போய்க்கொண்டு இருக்கிறது...கொஞ்ச நேரத்தில் தண்ணீர் கிட்டத்தட்ட ஆற்றுக்கு நடுவில் இழுத்துவந்துவிட்டது....நான் ஆற்றில் இறங்கிய இடம், ஆலமரம், முருகன் பாறை எதுவும் கண்ணுக்கு தெரியலை...கண்கள் சற்றே இருட்டிக்கொண்டு வருது...எதிர்த்து நீச்சல் அடிக்க முடியலை...அட்லீஸ்ட் தண்ணிர் போற வழியிலாவது நீந்துவோம் என்றால் கால்கள் மணலில் புதைவதும் நான் அதை இழுப்பதுமாக ஒரு ஜீவ மரண போராட்டம்...

சரி ஆனது ஆகிட்டது, என்று ஒரு மாதிரி க்ராஸாக நீச்சல் அடிக்க முயற்சி செய்தால் கொஞ்சம் தப்பிக்க முடியும் என்று நினைத்து அப்படியே செயல்படுத்த, கொஞ்ச நேரத்தில் எதிர் கரைக்கு அருகில், நான் ஆற்றில் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர், ஆனால் எதிர்கரைக்கு நெருக்கமாக இருக்கிறேன்...ஏதோ இனம்புரியாத மன உறுதி...சற்றே விரைவாக நீந்தி, நெருங்கி கரையை ஒட்டி வளர்ந்திருந்த ஒரு முள் மரத்தின் வேரை பிடித்தேன்...

கிட்டத்தட்ட மயங்கும் நிலை...உடம்பெல்லாம் வலி ரவுண்டு கட்டி அடிக்க...கரையில் ஏறினால்...உடம்பில் ட்ரெஸ் என்றொரு விஷயம் இல்லாதது தெரியுது...வேற வழி...ஏதோ ஒரு கொடியில் தொங்கிய ஒரு துண்டை கட்டிக்கொண்டு பாலத்தின் வழியாக நடந்து நான் ட்ரெஸ் வைத்த இடம் வந்தால்...அதுக்குள்ள ட்ரெஸ்ஸை எவனோ லவட்டிக்கிட்டு போயிருந்தான்...அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்து, யாரும் பார்க்கும் முன் தோட்டத்து வழியாக அறைக்குள் புகுந்து படுக்கையில் விழுந்தவன் தான்...

இது தான் பெண்ணைத்தாய் என்னை காப்பாற்றி கரைசேர்த்த கதை !!!

இப்போ சொல்லுங்க...லொள்ளுக்கும் எகத்தாளத்துக்கும் காரணம் தெரிஞ்சுருச்சில்லல...

Monday, December 04, 2006

ஏற்றம் தரும் யோகா கலை !!!

சுமார் ஐந்தாயிரம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்க்கத்திய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்க்கப்படுகிறது...லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள்..சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள்..ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்...

ஆனால் இந்தக்கலையை கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்துள்ளது...

இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்ச்சியை கொடுக்கிறது...இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள்..தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்கிறார்கள்...இதன் பெருமையை சிலாகிக்கிறார்கள்...இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாக சொல்கிறார்கள்...

யாருக்கு பயன் ?

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது...வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணி நேரம் செலவு செய்கிறார்கள்...இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது...இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது...இலக்கு முடிவதற்க்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது...

பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நன்பர், எதிர்த்த வீட்டு தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, ரோடு சரியில்லாதது, இன்ஸ்யூரன்ஸ், கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி..

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்க்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்ச்சியில ஈடுபடுவது பலன் அளிக்கும்....

இதன் மூலம் கர்ப்பிணி பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம்...நாள்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், எப்போதும் வேலையை சிந்தித்து அதன் மூலம் ஹைப்பர் டென்ஷன், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய அத்துனைவரும் பயன் அடையலாம்...வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்...

யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா ?

உட்கார்ந்து எழுந்து, கையை காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா...கீழே சற்று விரிவாக வகைப்படுத்தியுள்ளேன்..

யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்ச்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு)

இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்

பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா
என்று பிரிவுகள் உண்டு...

ஒவ்வொன்றையும் விளக்கி வாசகர்களை துயிலில் ஆழ்த்த நான் விரும்பவில்லை எனினும், யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனித்ததுக்கு பயனளிக்கு வகையில் செறிந்துள்ளது என்பதையும் ஆழமாக பதிக்க விரும்புகிறேன்...




கர்ப்பிணி ஒருவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி..



யோகா மேற்க்கத்திய நாடுகளில் சிறப்பான முறையில் மார்க்கெட்டிங் செய்யப்படும் காட்சிகள்..



இருவர் இணைந்து செய்யும் பயிற்ச்சி முறைகளும் உண்டு...




மேலேயுள்ள படத்தில் பாருங்கள்...இது போன்ற கடினமான ஆசனப்பயிற்சி தான் யோகா என்று இல்லை...மென்மையாக, உடலுக்கு எந்த விதமான துன்பத்தையும் தராத சிறந்த பயிற்ச்சிகள் உண்டு..





யோகா ஆசிறியர் ( கவனியுங்கள் - இந்தியர் அல்ல ) ஒருவர் தன்னுடைய மாணாக்கரை பழக்கும் காட்சி..



ஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்து பழகுவது முழுமையான பலன் தராது...ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்..




சக்கரம்,வட்டம் என்று புரியாத விஷயங்களை சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு...யோகா என்ற பெயரில் குணிந்து நிமிரவைத்து பணத்தை பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்..அதனால் நல்ல தரமான ஆசிறியரை தேர்ந்தெடுப்பது முதல்படியாக இருக்கட்டும்...

வெளிநாடுவாழ் இந்திய நன்பர் ஒருவரை சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக...நான் அவரிடம் வினவியது, நன்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்கு தெரிந்து நீர் எந்த பயிற்ச்சிக்கும் சென்றதில்லையே என்று...அவர் பதில் என்ன தெரியுமா..."இணையம் எதற்க்கு இருக்கிறது" என்பதே...அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையை கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாக பயின்று பிறகு ஆரம்பிக்க வேண்டும்...சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நன்பர்கள் முன்வரவேண்டும்...எங்கள் நிறுவனத்தில் யோகா மாஸ்டரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய்...அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயல்படுகிறார்...ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அல்ல, உபயோகமாகவும் செயல்படுத்தும் முறை உள்ளது...இந்திய அளவில் மாறிவரும் சூழலை யோகாவுக்கும் உங்களுக்கும் சாதகமாக பயன்படுத்த தயாரா நன்பரே !!!!!

Friday, December 01, 2006

நான் சந்தித்த அருமையான வலைப்பதிவர்கள்

வலைபதிய ஆரம்பித்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது...வந்த புதிதில் அப்படி இப்படி வலைப்பூக்களை படித்து நேரத்தை கழித்துக்கொண்டிருந்த எனக்கு, சொந்தமாக ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது..வலைப்பூ போண்டா சந்திப்புகள் பற்றி அவ்வப்போது வரும் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த காலத்தில் பதிவர்கள் சிலருடன் மின்மடல் தொடர்பும் இருந்தது...அப்படி இப்படி என பல பதிவர்களை இந்த ஆறுமாதத்தில் சந்தித்தேன்...இன்னும் பலரை சந்திக்க வேண்டும் என்று ஆவல்...இந்த பதிவில் நான் சந்தித்த வலைப்பதிவர்கள் பற்றியும், நான் அவர்களுக்கு கொடுத்த தொல்லைகள் பற்றியும் எழுத ஆசை..(அதான் ஆரம்பிச்சுட்டயே, எழுதி தொலைக்க வேண்டியது தானே ? - மிஸ்டர் மனசாட்சி)

கானா பிரபா

பெங்களூருக்கு அலுவலக வேலையாக வந்தவர் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்று மின் அஞ்சல் மூலமாக அறிந்தேன்..அவர் மொபைல் வேலைசெய்யாததால் லேண்ட் லைனில் பிடித்தேன்..உங்களை பார்க்க வருகிறேன் என்று சொன்னதும் மிகவும் சந்தோஷமாக எதிர்பார்த்திருந்தார்...நானும் ஸாஸ்கன் நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் - இப்போது லண்டனில் குப்பை கொட்டும் தலை ஆதியும் சென்று சந்தித்தோம்...உலாத்தல் எழுதும் உவரா இவர் என்று வெள்ளமென மகிழ்ச்சி...மாதவன் மாதிரி பளபளவென இருந்தார்...கானா பிரபாவின் தாயகம் யாழ் என்றதும் அதுவரை வலைபதிவு பற்றி பரிச்சயமில்லாத ஆதி அவரை கேள்விகளால் துளைத்துவிட்டார்...அவரது ஊர் அனுபவங்கள், ரேடியோ அனுபவங்கள் அனனத்துக்கும் மென்மையான சிரிப்புடன் பதில் சொல்லிய அவரது அமைதி மிகவும் கவர்ந்தது...

ஹோட்டல் ரிசப்ஷனில் தீப்பெட்டி வாங்கி ஒரு தம் போட்டேன்...

எங்கே போகலாம் என்று கேட்டதற்க்கு ஆதியே ஒரு ஹோட்டல் சொன்னார்...அங்கு சென்று ஒரு வெட்டு வெட்டிவிட்டு பில் வந்தவுடன் அதிரடியாக அதை கைப்பற்றினார் கானா பிரபா...பிறகு பல விஷயங்களை பேசிக்கொண்டே அவர் காரில் திரும்பினோம்...

வலைப்பதிவு இது போன்ற நட்புக்கு வழிவகுக்குமா என்ற ஆச்சர்யத்துடன் வீடு திரும்பினேன்...சமீபத்தில் "என் இனிய மாம்பழமே" என்று அவர் எழுதிய அருமையான பதிவை பார்த்தவுடன் அட நம்மாளு என்று ஒரு நெருக்கமான தோழமை மனதில் தோன்றியது...

மங்கை

நோய்டா செல்வதற்க்கு முன்பே மின்மடலில் தெரிவித்துவிட்டேன்...அதற்க்கு மிக சமீபத்தில் தான் அவரது மின் மடல் தெரிந்து அவரிடம் சில விஷயங்கள் பேசியிருப்பேன்...திடீர் என்று அவரது மொபைல் எண் எடுத்து பேசி நான் வருகிறேன் என்று சொன்னவுடன் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்...

நான் தங்கி இருந்ததோ டெல்லி ஜி.கே மார்க்...எங்கள் பாக்டரி மற்றும் அலுவலகமோ கிரேட்டர் நோய்டா தாண்டி - கிட்டத்தட்ட 80 கி.மீ..என்னுடைய பஞ்சாபி ட்ரைவர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை கொடுமையாக நிரூபித்தார்...80 ஆவது செக்டார் என்று கூறியதை 18 என்று அரைகுறையாக புரிந்துகொண்டு உத்திரப்பிரதேசத்தினை சுற்றிக்காட்டினார்...காலையில் விமானத்தில் வந்து பாக்டரியில் சுற்றி பார்த்துவிட்டு - லேப்டாப்பை கீழே போட்டுடைத்து - சில பல வேலைகளை செய்து டயர்டாகி ( மொத்தத்தில் நொந்து நூடுல்ஸாகி ) இருந்த என்னை மேலும் கொடுமைசெய்ய துணிந்தார் நமது அமரீந்தர் சிங்..

ஒரு வழியாக மங்கையின் இந்தி அறிவை கொண்டு (ட்ரைவருக்கு பஞ்சாபிதான் தெரியுது) போய் சேர்ந்த போது மங்கை அவர்களின் கணவர் அவர்களின் ப்ளார் வாசலில் நின்று வரவேற்றார்...இவர் எளிமையின் சிகரம்..மிக மென்மையான மனிதர்....ஒரு டாகி அவங்க வீட்ல இருந்ததா நியாபகம்...இவர் நல்லா கோழி எல்லாம் பிடிப்பார் என்று சிறப்பாக அறிமுகம் செய்தாங்க...சப்பாத்தி + பன்னீர் பட்டர் மசாலா மாதிரி ஒன்றை செய்து (!!) தந்தார்கள்...அவங்க பொண்ணு கேம்ஸ் விளையாடிக்கொண்டே இருப்பதில் ஒரு கவலை அவங்களுக்கு.....மற்ற பொது விஷயங்களை பேசிவிட்டு ( வலைப்பதிவு பற்றி எதுவும் பேசாமல்) அலுவலகம் திரும்பியவுடன் பல கேம்கள் கொண்ட ஒரு பைலை அவங்க மெயில் முகவரிக்கு அனுப்பி மேலும் பிரச்சினையை அதிகப்படுத்தினேன் :))

இவங்களோட ஓவர் கோயம்புத்தூர் ஊர்ப்பாசம் தான் இன்னும் குழப்பமாவே இருக்கு...எப்போ பார்த்தாலும் கிரேட் கோவை என்றே சொல்லிக்கிட்டிருப்பாங்க...

லக்கியார்

வலைப்பூ சுனாமி, வலைப்பூ சுந்தர ராமசாமி ( பொறவு, தான் சுஜாதாவும் இல்லை, பாலகுமாரனும் இல்லைங்கறார்), வலைப்பூ சுந்தர ராமசாமி (உபயம் பொன்ஸ்) லக்கியாரை சந்த்திதது இரண்டு மாதம் முன்பு என்று நினைக்கிறேன்...வலைப்பூவில் பலகாலமாக கும்மி அடித்துவிட்டு வேறு வழியே இல்லை என்று மொக்கையான ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பியாச்சு...தம் போடும் இடத்தில் வேளச்சேரி விஜய நகரை நோக்கி ஓடும் சாக்கடை இருந்தாலும் சில பல நேரத்துக்கு கும்மி அடிக்க முடிந்தது...மொதல்ல தலைமுடியை நீட்டா வெட்டுங்க என்று ஒரு பயங்கரமான அட்வைஸ் கொடுத்துக்கொண்டே சில பல விஷயங்களை பேசினோம்...அதன் பிறகு பல முறை சந்தித்தாகி விட்டது...முத்து தமிழினி வீட்டில் ஒருமுறை, போட்டியில் வென்றவருக்கு காந்தி கடிகாரத்தை அளிக்க ஒரு முறை, ப்ரவுஸிங் செண்டரில் ஒருமுறை என்று...ஆனாலும் முதல் சந்திப்பை நினைவுகூற இந்த பதிவு...

தம் கடையில் கிங்ஸ் இல்லை என்ற போதும் வில்ஸ் பரவாயில்லை என்று கூறும் எளிமையின் சிகரம்...ஒரு திரைப்படத்தில் காருடன் பேசும் ரஜினி போல வண்டி கூட பேசுவார் போல...எதிர் கருத்துடைய வைகோவையும் வாருங்கள் வைகோ என்றழைக்கும் உள்ளம்....தேன்கூட்டில் அப்பாவி அடிமைகளுக்கு என்றெழுதி முதல் பரிசை தட்டிச்செல்லும் திறமை...இனிமேலயாவது எல்லாருக்கும் நல்லவனா இருக்கலாமே என்று எண்ணும் மனோபாவம்...எல்லாருக்கும் வாராதுப்பே...!!!

முத்து (தமிழினி)

லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு ஒரு மாதம் நிம்மதியை கொடுத்துவிட்டு விடுமுறையில் சென்றிருக்கும் முத்து தமிழினியை சென்ற மாதம் சந்தித்தேன்...அதே சப்பையான காரணத்துக்காக சென்னைக்கு மீண்டும் சென்ற போது, வலைப்பூ சுனாமியாரை அழைத்தேன்...முத்து சென்னையில் தான் இருக்காராம், வாங்க போலாம் என்று...அவரோ, கவிஜர் பாலாபாய் ஊரில் தான் இருப்பதாகவும், அவரையும் தூக்கி போட்டுக்கொண்டு வருவதாகவும் சொன்னார்...கடையில் பாலாபாய் இல்லாமல் தனியாக வந்தார்...பாலா எங்கேயோ போனை கையில் வைத்துக்கொண்டு நிற்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்துக்கு சாரை கிளப்புவது கடினம் (பா.க.ச) என்பது தெரிந்தது தான் மட்டும் வந்ததாக தெரிவித்தார்...

கொடுமையிலும் கொடுமையாக நான் சென்ற பைக் கிக்கர் நான் உதைத்த உதையில் கழன்று ஒடி விட, ஹீரோ ஹோண்டாவை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில்...இந்த கொடுமையான சமயத்தில் முத்து வீட்டை தேடி கண்டறிந்து அங்கே சென்றால் யாரையோ வைத்து மண்டகப்படி நடத்திக்கொண்டிருந்தார்..நான் சென்றதால் அவர் தப்பினார்...(முன்னாள் வங்கி ஊழியர்)...

பிறகு சுனாமியார் வந்து சேர்ந்ததும், இது யார், அது யார் என்று வழக்கமான பதிவர் சந்திப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது...ஆறு மணிக்கு காரை கிளப்பினால் தான் கொடுமையான ட்ராவல்ஸ் / லாரி ட்ராபிக்கில் இருந்து தப்ப முடியும் என்பதால் 20 நிமிடம் கூட நிம்மதியாக பேசமுடியாத கட்டாயம்...வலைப்பூ சின்னக்குத்தூசியை அங்கேயே விட்டுவிட்டு நான் அப்பீட் ஆகினேன்...

முத்து எளிமையின் சிகரம்...யாருடனும் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளக்கூடிய கேரக்டர்...இன்றைக்கு வலைப்பூ எழுதும் பலரில் பட்டென ஆனித்தரமான கருத்துக்களை வைக்ககூடியவர்...எதிராளியும் சிரிக்க சிரிக்க எழுதுபவர்...ஒருமுறை ஹிந்தி எதிர்ப்பு பற்றிய எனது பதிவில் ஹிந்தி படித்தால் பெரிய ஆள் ஆகலாம் என்று எழுதி இருந்தேன்...(சிறுபிள்ளைத்தனமான கருத்துதான்...) அதன் பதிலாக, ஹிந்தி தெரிந்தால் பெரிய ஆள் ஆகலாம் என்றால் ஏன் ஹிந்திக்காரன் தமிழ்நாட்டில் சோன் பப்டி விக்குறான் என்று தடலடியாக கேட்டு, என்னை கடுமையாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்...அம்புட்டுதேன் இந்த பதிவு....


இன்னும் சில பதிவர்களின் அனுமதியோடு, அவர்களை சந்தித்த விவரம் பற்றி எழுதுவேன்...ஆனால் அதில் முதல் பதிவு கவிஞர் பாலபாரதி பற்றியதாக இருக்கும்...(இவரிடம் அனுமதி தேவை இல்லை...நான் பா.க.ச. உறுப்பினர் , பெங்களூர் கிளை அலுவலகம்)

இப்போதைக்கு வர்ட்ட்டா...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....